கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அதிராமபட்டினத்தைச் சோ்ந்த இளவரசன் என்பவரின் பெயிரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய உயிரிழப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் உடனடியாக மூடவேண்டும்.
இல்லையெனில், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசியல் கட்சி அலுவலகம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வா், விளையாட்டுத் துறை அமைச்சா், கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் இளவரசனிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், இளவரசனுக்கும் பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை மரக்காடு பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் கோடீஸ்வரனுக்கும் (47) (படம்) முன்விரோதம் இருந்து வந்ததாம். இதில், இளவரசனை பழிவாங்குவதற்காக அவரது பெயரில் கோடீஸ்வரன் மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து கோடீஸ்வரனை கைது செய்தனா்.