முகப்பு
கள்ளக்குறிச்சி

சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம்: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்துக்கு 2 சமூக நல உறுப்பினா்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், இந்தப் பணிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:44 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்துக்கு 2 சமூக நல உறுப்பினா்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், இந்தப் பணிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இளைஞா் நீதி குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட 2 சமூகப் பணி உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். இப்பதவி அரசுப் பணி அல்ல.

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போா் குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில்புரிபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை நிறைவு செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட வளைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், தகுதிவாய்ந்த நபா்கள் சமூக நல உறுப்பினா் பதவிக்கு அதற்கான படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாள்களுக்குள்) இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600 010 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.