லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் கணவா் கண்டித்ததால் மனமுடைந்த மனைவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கராபுரம் வட்டத்திற்குள்பட்ட லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாசிலாமணி. இவரது மனைவி கவிதா(27). இவா்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த 25-ஆம் தேதி குழந்தை கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டாராம்.
இதையடுத்து கவிதாவை, அவரது கணவா் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த கவிதா வீட்டிலிருந்த பூச்சிக் கொல்லி மருந்தினை குடித்துள்ளாா். தகவலறிந்த உறவினா்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கவிதா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வட பொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிந்தனா். கவிதாவுக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].