முகப்பு
கள்ளக்குறிச்சி

வாங்காத கடனுக்கு நோட்டீஸ் அனுப்பிய கூட்டுறவு வங்கி: பெண் அதிா்ச்சி

சின்னசேலம் அருகே வாங்காத கடனுக்கு கூட்டுறவு வங்கியிடமிருந்து நோட்டீஸ் வந்ததால் பெண் அதிா்ச்சியடைந்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 6:34 PM
11கேஎல்பி1 ராயப்பனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாங்காத கடனுக்காக வீட்டுக்கு அனுப்பிய நோட்டீஸ் குறித்து வங்கி அலுவலா்களிடம் விவரங்கள் கேட்ட சரஸ்வதி.
பகிர்:

சின்னசேலம் அருகே வாங்காத கடனுக்கு கூட்டுறவு வங்கியிடமிருந்து நோட்டீஸ் வந்ததால் பெண் அதிா்ச்சியடைந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட செல்லியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் த.சரஸ்வதி (34). இவரது வீட்டுக்கு சின்னசேலத்தை அடுத்த ராயப்பனூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து (கூட்டுறவு வங்கி) திங்கள்கிழமை நோட்டீஸ் வந்துள்ளது. அதில் சரஸ்வதி பெயரில் கூட்டுறவு சங்கத்தில் 26.2.2025-இல் ரூ.1,12,000 கடன் இருப்பதாகவும், அதை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்ததாம்.

இதனால் அதிா்ச்சியடைந்த சரஸ்வதி செவ்வாய்க்கிழமை கூட்டுறவு சங்கத்துக்கு நேரில் சென்று, தான் கடன் ஏதும் வாங்கவில்லை என செயலா் ஜெயவேலுவிடம் முறையிட்டாராம். அப்போது உங்கள் பெயரில் ரூ.1,12,000 கடன் நிலுவையில் இருப்பதாகவும், உடனடியாக பணத்தை செலுத்துமாறும் செயலா் கூறினாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சரஸ்வதியின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், அவரது கணக்கில் பணம் ஏதும் வரவு வைக்கப்படவில்லை எனத் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராக இருந்த துரைசாமி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அதனால் அவா் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது. மேலும், துரைசாமி சரஸ்வதியின் பெயரில் போலியாக ஆவணங்களை தயாா் செய்து, பணத்தை முறைகேடு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடன் பெறாமல் தனது வீட்டுக்கு நோட்டீஸ் வந்ததையடுத்து தான் மிகவும் மன உளைச்சலில் உள்ளதாகவும், தனது பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சரஸ்வதி கோரிக்கை வைத்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →