முகப்பு
புதுச்சேரி

கடல் அரிப்பு: அடையாளம் இழக்கும் ஆரோ பீச்!

தொடரும் கடலரிப்பால், புதுச்சேரி ஆரோ பீச் முழுவதும் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:38 PM
பகிர்:

தொடரும் கடலரிப்பால், புதுச்சேரி ஆரோ பீச் முழுவதும் காணாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
 சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை, பாரதிப் பூங்கா உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை நாள் தோறும் கவர்ந்திழுக்கின்றன.
 இதேபோல், புதுவையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆரோவில் சர்வதேச நகருக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அதனருகே ஆரோ பீச் உள்ளது.
 இப்பகுதியில் தான் வெளிநாட்டுப் பயணிகள், சூரிய குளியல் எடுப்பது வழக்கம். தற்போது இங்கு தொடர்ந்து வரும் கடலரிப்பால், ஆரோ பீச் முழுவதும் அழிந்து வருகிறது. கடற்கரையை ஒட்டிய விடுதிகளின் கட்டடங்கள் இடிந்து விழுந்து விட்டன.
 கரையை ஒட்டி நடப்பட்டிருந்த மரங்களும் கடல் அரிப்பைத் தாங்காமல் வேருடன் விழுந்து விட்டன. இதனால் இங்கு சூரிய குளியல் எடுக்க வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரையே இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
 மீனவர்களுக்கும் பாதிப்பு: கடலரிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து வருவதால், தந்திராயன்குப்பம், பெரிய முதலியார்குப்பம், சின்ன முதலியார்குப்பம் கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர். கடற்கரைப் பகுதி சுருங்கி வருவதால் படகுகளை நிறுத்த இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் ஒரு கி.மீ. தூரம் சென்று படகுகளை பாதுகாப்பாக நிறுத்துகின்றனர்.
 தந்திராயன்குப்பம், பெரிய முதலியார்குப்பம், சின்ன முதலியார்குப்பம் உள்ளிட்ட 3 இடங்களிலும் கடலோரத்தில் பெரியப் பாறைகளை போட்டால் மட்டுமே கடலரிப்பைக் குறைக்க முடியும். இல்லையென்றால் கடலரிப்பு ஏற்பட்டு, கிழக்கு கடற்கரைச் சாலை வரை கடல் நீர் புகும் அபாயம் ஏற்படும்.
 இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ராஜ் கூறியது: சாதாரணமான காலங்களிலேயே கடலரிப்பு ஏற்படும். தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
 திங்கள்கிழமை 10 மீட்டர் தூரம் கடல் அலைகள் புகுந்ததால் அரிப்பு அதிகமாக உள்ளது. இதனால் படகுகளை மேடான பகுதிகளில் நிறுத்தி உள்ளோம். மீனவர்களின் வீடுகளும் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பெரிய பாறைகளை போட்டு கடல் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.