புதுச்சேரி தங்கும் விடுதியில் முன்னாள் ஊராட்சித் தலைவர் தற்கொலை
புதுச்சேரி தங்கும் விடுதியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி தங்கும் விடுதியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள துறையூரைச் சேர்ந்த செல்லபாண்டியின் மகன் அருள்ராஜ் (42). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவர் பல இடங்களில் கடன் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 4-ஆம் தேதி புதுச்சேரி வந்தார். புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். 7-ஆம் தேதி அறையை காலி செய்வதாக ஊழியர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஊழியர்கள் அவரது அறைக்குச் சென்று கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் விடுதி மேலாளருக்கு தெரிவித்தனர். விடுதி மேலாளர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கழிவறையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததை கண்டனர். அதனை திறக்க முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உதவி ஆய்வாளர் சாரங்கபாணி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்தனர்.
அப்போது கழிவறையில் அமர்ந்தபடியே வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் அருள்ராஜ் இறந்து கிடந்தார்.
அறை முழுவதும் மதுப் புட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் சிதறிக் கிடந்தன. அதிகமாக மது குடித்ததால் அவர் உயிரிழந்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அருள்ராஜ் இறந்தது குறித்து கோவில்பட்டியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.