புதுவை தலைமைச் செயலரிடம் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் முறையீடு
புதுவையில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதை செல்லாது என
புதுவையில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டதை செல்லாது என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்த நிலையில், புதிய தலைமைச் செயலர் அஸ்வினிகுமாரை பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை சந்தித்து முறையிட்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை புதுவை சட்டப்பேரவையின் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார்.
இதற்கிடையே, ஆளுநர் மாளிகையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் எந்தவித அறிவிப்பும் இன்றி கிரண் பேடி பதவிப் பிராமணம் செய்து வைத்தார். இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளும் காங்கிரஸ் அரசு இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
மேலும், நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட 3 பேரும் தங்களுக்கு எம்.எல்.ஏ.க்களுக்குரிய சலுகைகளை வழங்க வேண்டும் என பேரவைத் தலைவருக்கு கடிதம் அளித்தனர். ஆனால், உரிய வகையில் அறிவிப்பு இல்லை எனக் கூறி வைத்திலிங்கம் அதை நிராகரித்து விட்டார்.
இதற்கிடையே, 2 மாத விடுமுறைக்காக பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் கிடப்பில் இருந்தது.
இந்த நிலையில், வைத்திலிங்கம் கடந்த மாதம் புதுவைக்கு திரும்பினார். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை உரிய அறிவிப்பை தலைமைச் செயலாளருக்கு ஏற்கெனவே அனுப்பியிருந்தது. பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் இதுகுறித்து என்ன முடிவெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் எதிர்நோக்கி இருந்தன.
நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், அரசாணையும் முறையாக இல்லை. இதனால், இந்த நியமனம் செல்லாது என வைத்திலிங்கம் அறிவித்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் உள்ளிட்டோர் தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமாரை புதன்கிழமை சந்தித்து முறையிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறியதாவது :
நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான மத்திய உள்துறையின் உத்தரவு முறையாக இல்லை என பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் கூறுவது அவர் வகிக்கும் பதவிக்கு தகுதி கிடையாது. இந்த உத்தரவில் குடியரசுத் தலைவர் கையெழுத்து போட மாட்டார். மத்திய உள்துறையின் அறிவிப்பை தொடர்ந்தே புதுவை அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, நாங்கள் 3 பேரும் தான் நியமன எம்.எல்.ஏக்கள். தலைமைச் செயலாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளோம். அவர் மத்திய உள்துறையுடன் கலந்து பேசிவிட்டு முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். எப்படி இருந்தாலும் வரும் 23-ஆம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்கள் பிரச்னைகளை எழுப்புவோம் என்றார் சாமிநாதன்.