புதுச்சேரி

அனுமதியின்றி பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை

DIN

புதுச்சேரி நகராட்சி பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி நகராட்சி பொலிவுறு நகராட்சியாக (ஸ்மார்ட் சிட்டி) மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ளது. இதன் மூலம் பலதரப்பட்ட முன்னேற்றத்தை புதுச்சேரி நகராட்சி எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில், நகராட்சியைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும், அழகமாகவும் வைத்திருக்க அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் ஒரு முதன்மையான மாநிலமாக உருவாக வாய்ப்புள்ளது. நாம் முன்னேறுவதை இந்திய அரசு கண்காணித்து கொண்டு வருகிறது.
நகரின் அழகைக் கெடுக்கும் விதமாக பதாகை கலாசாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாள் வாழ்த்துகள், வரவேற்பு விழாக்கள் எனத் தொடங்கி, தற்போது சினிமா துறை சார்ந்த சுவரொட்டிகள், திருமணம் உள்ளிட்ட வீட்டு விஷேச நிகழ்ச்சிக்கான பதாகைகள் வரை அனைத்தும் புதுச்சேரி மாநிலத்தின் அழகைச் சீர்குலைப்பதுடன் சுற்றுலா வளர்ச்சியையும் பாதிக்கிறது.
ஆகவே, புதுச்சேரியின் அழகைக் காக்க விளம்பரப் பதாகைகள் புதுச்சேரி நகராட்சியின் அனுமதி பெற்றே வைக்கப்பட வேண்டும். மேலும், அவ்வாறு அனுமதி பெரும் விளம்பரத்தில் அனுமதி பெற்ற விவரத்தையும் அச்சடிக்க வேண்டும். நான்கு வீதி சந்திப்பு, வளைவுகளில் பதாகை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சி பதாகைகள் கண்டிப்பாக நான்கு வீதி சந்திப்பில் வைக்கவே கூடாது.
மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், பதாகைகளை அகற்றி அதற்கான செலவும் வசூலிக்கப்படும். மேலும், வீதிகளில் உலவும் கால்நடைகள், புல்வாருக்குள் மேயும் கால்நடைகள் கண்டிப்பாகப் பிடித்து கோசாலைக்கு அனுப்பப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிராட்டியூா் முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்

சுதந்திரப் போராட்டப் பொருள்களை நன்கொடையாக அளிக்க வேண்டுகோள்

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

முன்னாள் காங்கிரஸ் நிா்வாகி, ஹிந்தி நடிகா் பாஜகவில் இணைந்தனா்

கோப்பு மகா மாரியம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT