அரசுப் பள்ளியில் திருட்டு முயற்சி
புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் அருகே அரசுப் பள்ளியில் நள்ளிரவு, ஜன்னலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த திருக்கனூர் அருகே அரசுப் பள்ளியில் நள்ளிரவு, ஜன்னலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு அம்மன் கோயில் எதிரே அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.9) மாலை வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் பள்ளியை பூட்டிச் சென்றனர்.
சனிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் அந்த பள்ளியின் கிரில் கதவைத் தாண்டி உள்ளே புகுந்து தலைமை ஆசிரியரின் அலுவலக அறைக் கதவின் பூட்டை உடைக்க முயன்றனர். முடியாததால், அருகிலுள்ள நூலக அறையின் சிமென்ட் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பாடப் புத்தகங்கள், பாடம் சம்பந்தமான சிடிக்களை தூக்கி வெளியே எறிந்த மர்ம நபர்கள், 20 பெட்டி சாக்பீஸ்களை எடுத்துச் சென்றனர். தலைமை ஆசிரியர் அறைக் கதவை உடைக்க முடியாததால், அங்கிருந்த கணினி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்டவை தப்பின.
ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், இதுகுறித்து தலைமை ஆசிரியர் கனகமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்து வந்த அவர், இச்சம்பவம் தொடர்பாக திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.