என்.ஆர். காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி மீதான அதிருப்தி காரணமாக, அகில இந்திய என்.ஆர். டிரேடு யூனியன் காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்தனர்.
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி மீதான அதிருப்தி காரணமாக, அகில இந்திய என்.ஆர். டிரேடு யூனியன் காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்தனர்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி மீதான பற்றின் காரணமாக, அகில இந்திய என்.ஆர். டிரேடு யூனியன் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. இதனை ராஜசேகர் தொடங்கி, செயல்படுத்தி வந்தார்.
பின்னர் இந்த அமைப்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. பல்வேறு தொழிற்சாலைகளிலும், ஆட்டோ நிறுத்தங்களிலும் என்.ஆர். தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. தற்போது, 110 இடங்களில் என்.ஆர். தொழிற்சங்கம் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜசேகர், மாநில அமைப்புச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
இதுகுறித்து ராஜசேகரிடம் கேட்டபோது, என்.ஆர். காங்கிரஸ் கட்சி செயல்படாமல் உள்ளது. மேலும், தொழிலாளர்களுக்காக நிர்வாகிகள் செயல்படுவதற்கும் அனுமதி தரப்படுவது இல்லை. இதன் காரணமாக, தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்துள்ளோம் என்றார் அவர்.