புதுவை அமைச்சர்கள் 16 மாதங்களில் 457 முறை விமானப் பயணம்
புதுவை மாநில முதல்வர் உள்பட அமைச்சர்கள் 16 மாதங்களில் 457 முறை விமான பயணம் செய்துள்ளனர். இதற்காக புதுவை அரசுக்கு ரூ.66.70 லட்சம் செலவாகியுள்ளது. தகவல் உரிமை சட்டத்தின்கீழ்
புதுவை மாநில முதல்வர் உள்பட அமைச்சர்கள் 16 மாதங்களில் 457 முறை விமான பயணம் செய்துள்ளனர். இதற்காக புதுவை அரசுக்கு ரூ.66.70 லட்சம் செலவாகியுள்ளது. தகவல் உரிமை சட்டத்தின்கீழ் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்தில் முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதுதவிர புதுவை அரசின் தில்லி பிரதிநிதி ஒருவர் உள்ளார். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு முறை பயணம் செய்யும்போது விமான சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் பி.ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டிருந்தார். அதில் 1.8.16 முதல் 31.12.17 வரை 16 மாத காலத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு விமானத்தில் சென்றனர். அவர்களின் விமானச் செலவு எவ்வளவு? எனக் கேட்கப்பட்டிருந்தது. இதற்கான பதிலை புதுவை அரசு வழங்கியுள்ளது. அதன்படி, 16 மாத காலத்தில் அமைச்சர்கள் 457 முறை விமானப் பயணம் செய்துள்ளனர்.
இதற்காக புதுவை அரசுக்கு ரூ.66.70 லட்சம் செலவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
விமான சேவையை அதிகம் பயன்படுத்திய அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ். ஏனாம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட அவர், பொதுப் பணித் துறையின் புதுவை அரசு விருந்தினர் இல்லத்தை ரூ.18.15 லட்சம் செலவில் சீரமைத்து அதில் தற்போது குடியிருந்து வருகிறார்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் 16 மாத காலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, ஹைதராபாத், தில்லி என அதிகபட்சமாக 163 முறை விமானப் பயணம் செய்துள்ளார்.
இதற்காக ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 143 செலவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அதிகபட்சமாக முதல்வர் 120 முறை விமானப் பயணம் செய்தற்காக ரூ.22 லட்சத்து 55 ஆயிரத்து 155 செலவு செய்யப்பட்டுள்ளது.
பொதுப் பணித் துறை அமைச்சர் 40 முறை விமான பயணம் செய்ததற்காக ரூ.4,32,875-ம், தில்லி சிறப்புப் பிரதிநிதி ஜான்குமார் 35 முறை விமானப் பயணம் செய்ததற்காக ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 516-ம், சமூக நல அமைச்சர் 30 முறை விமான பயணம் செய்து ரூ.9 லட்சத்து 73 ஆயிரத்து 913,-ம் வருவாய்த் துறை அமைச்சர் 26 முறை பயணம் செய்து ரூ.8 லட்சத்து 54 ஆயிரத்து 144-ம், முதல்வரின் நாடாளுமன்ற செயலர் 21 முறை விமானப் பயணம் செய்ததற்காக ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 784-ம், வேளாண் துறை அமைச்சர் 20 முறை விமானப் பயணம் செய்து ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 793, அரசுக் கொறடா 2 முறை விமானப் பயணம் செய்து ரூ.26 ஆயிரத்து 434 செலவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக அமைச்சர்கள் 457 முறை விமானப் பயணம் செய்துள்ளனர். இந்தத் தொகை அந்த நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டுள்ள ஒரு பகுதி தொகை மட்டும் ஆகும்.