மாஹே: மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது
மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 எதிரிகளை மாஹே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
மார்க்சிஸ்ட் பிரமுகர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 எதிரிகளை மாஹே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுவை மாநிலத்துக்குள்பட்ட மாஹே பிராந்தியம், பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கனிபொழில் பாபு (45). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் ஆவார். கடந்த மே 7-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கேரள எல்லைப் பகுதியில் பாஜக பிரமுகர் ஷமேஜ் கொலை செய்யப்பட்டார். அடுத்தடுத்து நடைபெற்ற கம்யூனிஸ்ட், பாஜக பிரமுகர்களின் கொலைச் சம்பவங்களால் மாஹே மற்றும் அதையொட்டிய கேரள பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கனிபொழில் பாபு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாஹே பிராந்தியம் கிழக்கு பள்ளியூரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் நிஜேஸை (34) போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், பண்ணூரை சேர்ந்த சுரேஷ் மகன் ஜெரின் சுரேஷ் (31), மாஹே பிராந்தியம் பந்தக்கால் அருகே சிவகங்கா கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சரத் (25) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற எதிரிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என புதுவை மாநில சட்டம்- ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா தெரிவித்தார்.