கர்நாடக மாநில பாஜக தவறுகளுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்: முதல்வர்
கர்நாடகத்தில் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கிய பாஜகவின் தவறுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும்தான்
கர்நாடகத்தில் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கிய பாஜகவின் தவறுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவாக ஆண்டுதோறும் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து ஐஎன்டியுசி சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், புதுச்சேரி வழியாக ராஜீவ் காந்தி நினைவு ஜோதி ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
அதன்படி, 27-ஆவது நினைவு ஜோதி யாத்திரையை கடந்த 15-ஆம் தேதி கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் தொடக்கிவைத்தார். ஐஎன்டியுசி நிர்வாகி பிரகாசம் தலைமையில் பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற ஜோதி யாத்திரை குழுவினர், புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்தடைந்தனர்.
அவர்களை புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., புதுச்சேரி ஐஎன்டியுசி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரிக்கு வந்த ராஜீவ் காந்தி நினைவு யாத்திரைக் குழுவினரை முதல்வர் வே.நாராயணசாமி வாழ்த்திப் பேசியதாவது:
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் தியாகத்தால்தான் நாடு இன்றளவும் ஒற்றுமையுடன் இருக்கிறது. மதவாத, பிரிவினைவாத சக்திகள் நாட்டை துண்டாட நினைக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பு தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பாஜகவினர் 20 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததாக கூறுகின்றனர். அவர்கள் ஜனநாயக முறையில் ஆட்சியைப் பிடித்தார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
ஆனால், பாஜகவினர் மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை மிரட்டியும், விலைக்கு வாங்கியும் ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது நடைபெற்று முடிந்த கர்நாடக மாநிலத்திலும் இதே நிலைதான். ஆனால், காங்கிரஸ் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதன்படியே கர்நாடகத்திலும் நடந்து கொண்டது.
கர்நாடகத்தில் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கிய பாஜகவின் தவறுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் தார்மிகப் பொறுப்பு ஏற்க வேண்டும். சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறையை தனது கைகளில் வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள், அதிகாரிகளைப் பழிவாங்கும் பாஜகவின் எண்ணம் இனி ஒருபோதும் நிறைவேறாது.
வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற அனைவரும் உறுதுணையாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.