புதுச்சேரி

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் புதிய நடைமுறை: புதுவை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

தினமணி

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் புதிய நடைமுறையை ஏற்க முடியாது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.
 புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
 குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெறுபவர்களின் மதிப்பெண்கள், தர நிலை, நேர்காணல் அடிப்படையில் அவர்களுக்கு ஐஏஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியிடங்களை ஒதுக்கும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது.
 இதற்குப் பதிலாக குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அவர்களது பயிற்சிக் காலத்தில் சிறப்பாக செயல்படுவதன் அடிப்படையில் அவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியிடங்களை ஒதுக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஏற்புடையதல்ல.
 இந்தத் தேர்வை எழுதுகிறவர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். தற்போது உள்ள முறையில் எந்தக் குறையும் கிடையாது.
 திறமை வாய்ந்தவர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு, பயிற்சிக் காலத்தில் அவர்களது திறமையைப் பார்க்க வேண்டியது தேவையில்லாதது.
 இதுகுறித்து பிரதமர், ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணித் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
 ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு பெற்றவர்களின் பயிற்சிக் கால மதிப்பீட்டை கணக்கிட்டு, அதை பணி ஒதுக்கீட்டுக்கு பயன்படுத்துவது ஏற்புடையதல்ல.
 பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கர்நாடகத் தேர்தல் நடைபெற்றபோது விலை ஏற்றப்படவில்லை. எந்த நாட்டிலும் இந்த விலை உயர்வு இல்லை. மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது ரூ.2 உயர்த்தினால் பாஜக பல கட்டப் போராட்டங்களை நடத்தியது. ஆனால், பெட்ரோலியப் பொருள்கள் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் கையில் தற்போது கொடுத்த காரணத்தினால் விலை உயர்வு அதிகரிக்கிறது. இது சாதாரண மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 ஒவ்வோர் ஆண்டும் பெட்ரோல் டீசலில் இருந்து மத்திய அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. மத்திய அரசு திட்டமிட்டு தனது வருவாயை அதிகரிக்க பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. தினமும் விலையை ஏற்றாமல் 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT