முகப்பு
புதுச்சேரி

தமிழறிஞர் மன்னர் மன்னனுக்கு புதுவை, தமிழக அரசுகள் பாராட்டு விழா நடத்த வேண்டும்: கவிஞர் முத்துலிங்கம்

தமிழறிஞர் மன்னர் மன்னனுக்கு தமிழக, புதுவை அரசுகள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கவிஞர் முத்துலிங்கம் வலியுறுத்தினார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:54 AM
பகிர்:

தமிழறிஞர் மன்னர் மன்னனுக்கு தமிழக, புதுவை அரசுகள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கவிஞர் முத்துலிங்கம் வலியுறுத்தினார்.
 பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா, மன்னர் மன்னனின் பொது வாழ்க்கை 75 ஆண்டுகள் புகழ் விழா ஆகிய நிகழ்ச்சிகள் புதுச்சேரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு பாரதிதாசனின் பேரனும், கவிஞருமான கோ.பாரதி தலைமை வகித்தார். தமிழறிஞர் மன்னர் மன்னன் முன்னிலை வகித்தார்.
 விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கவிஞர் முத்துலிங்கம் பேசியதாவது:
 பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவன் நான். அவரது மகன் மன்னர் மன்னன் எழுத்து மற்றும் கலையுலகில் நிறைய பணிகளை ஆற்றியுள்ளார். அவரது படைப்புகளில் அடித்தட்டு மக்களின் குரல்களைப் பதிவு செய்துள்ளார்.
 வானொலி நிலையத்தில் அவர் பணியாற்றிய போது, அரசுத் திட்டங்களைப் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்தவர்.
 நலிந்த கலைஞர்களையும் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர். மேடை நாடகங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளித்தார். மூத்த தமிழறிஞரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான மன்னர் மன்னனுக்கு புதுவை, தமிழக அரசுகள் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்றார் கவிஞர் முத்துலிங்கம். விழாவில் புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., கலைமாமணி இர.அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து "மனம் கவரும் மன்னர் மன்னன்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.