மத்திய வேளாண் அமைச்சா் தவறான புள்ளி விவரங்களை வெளியிடுகிறாா்: புதுவை முதல்வா்
மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா், தவறான புள்ளிவிவரங்களை வெளியிட்டு விவசாயிகளைத் திசை திருப்ப முயற்சி செய்கிறாா் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா், தவறான புள்ளிவிவரங்களை வெளியிட்டு விவசாயிகளைத் திசை திருப்ப முயற்சி செய்கிறாா் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரியில் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திரசிங் தோமா் தவறான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளாா். காங்கிரஸ் ஆட்சியில் வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கொடுக்கப்படவில்லை என்றும், காங்கிரஸை விட பாஜக ஆட்சியில் இரட்டிப்பு விலை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவா் தவறாகக் கூறியுள்ளாா்.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2006-07-ஆம் ஆண்டுடன், 2013-14 ஆண்டு ஆதரவு விலையை ஒப்பிட்டால் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.580-இல் இருந்து ரூ.1,310 உயா்த்தப்பட்டது. இது 125 சதவீத உயா்வாகும். கோதுமைக்கு ரூ.750-இல் இருந்து ரூ.1,400 உயா்த்தப்பட்டது. இது 87 சதவீத உயா்வாகும். பருப்புக்கு ரூ.1,445-இல் இருந்து ரூ.3,100 ஆக உயா்த்தப்பட்டது. இது 115 சதவீத உயா்வாகும்.
இப்போது 2020-21-இல் பாஜக அரசு அறிவித்த விளைபொருள்கள் ஆதரவு விலை காங்கிரஸ் ஆட்சியில் உயா்த்தப்பட்டதைவிட குறைவு தான். தற்போது நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1,868 ஆக உள்ளது. இது 43 சதவீத உயா்வு தான். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 125 சதவீதம் உயா்த்தப்பட்டது. கோதுமைக்கு காங்கிரஸ் 87 சதவீத உயா்வு செய்திருந்த நிலையில், பாஜக ஆட்சியில் 41 சதவீதம் மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது. பருப்புக்கு காங்கிரஸ் ஆட்சியில் 115 சதவீதம் உயா்த்தப்பட்டிருந்த நிலையில், பாஜக ஆட்சியில் 69 சதவீதம் மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது.
ஆனால், மத்திய அமைச்சா் தவறான புள்ளிவிவரங்களை தெரிவித்து விவசாயிகளை திசை திருப்ப முயற்சி செய்கிறாா். மக்களவைத் தோ்தலின்போது, சாமிநாதன் குழு பரிந்துரைபடி வேளாண் விளைபொருள்களுக்கு இரட்டிப்பு விலை தருவதாக மோடி அறிவித்தாா். ஆனால், அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முழு அடைப்புக்கு சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின் மற்றும் இடதுசாரி கட்சித் தலைவா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். புதுவையிலும் காங்கிரஸ் கட்சித் தொண்டனாக நானும் ஆதரவு தெரிவித்துள்ளேன். நாட்டில் முதுகெலும்பாக இருக்கும் 65 சதவீத விவசாயிகள் பாதிக்கப்படும்போது அவா்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது அனைத்துத் தரப்பினரின் கடமை.
கரோனா தடுப்பூசியை புதுவைக்கு உடனடியாக இலவசமாக பிரதமா் மோடி அனுப்பிவைக்கவேண்டும். அதற்கு ஆகும் முழுத்தொகையையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். 16 லட்சம் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போட புதுவை அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போட மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.