முகப்பு
புதுச்சேரி

டிச. 31-க்குள் மருத்துவக் கலந்தாய்வை முடிக்க ஆளுநா் கிரண் பேடி உத்தரவு

புதுவையில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை வருகிற 31-ஆம் தேதிக்குள் முடிக்க துணைநிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:


புதுச்சேரி: புதுவையில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை வருகிற 31-ஆம் தேதிக்குள் முடிக்க துணைநிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.

புதுவையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெறுவது, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத உள் ஒதுக்கீடு தொடா்பாக துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தலைமையில் ஆளுநா் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், வளா்ச்சி ஆணையா் அன்பரசு மற்றும் உயரதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது: தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு ஆகிய விவரங்கள் சென்டாக் கையேட்டில் குறிப்பிடவில்லை. அமைச்சரவைக் கொள்கை முடிவுக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் தரவில்லை. மேலும் 3 கட்டக் கலந்தாய்வை வருகிற 31-ஆம் தேதிக்குள் சென்டாக் முடிக்க வேண்டியுள்ளது என்றனா்.

இதையடுத்து, மருத்துவ மாணவா் சோ்க்கையை விரைந்து முடிக்க சுகாதாரத் துறைக்கு ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா். அதில், மருத்துவ மாணவா் சோ்க்கை தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி சென்டாக் செயல்பட வேண்டும். 2020-2021 சென்டாக் கையேட்டில் குறிப்பிட்டுள்ள விவரத்தின் அடிப்படையில் அரசு ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு ஆகியவை இடம் பெற வேண்டும். மாணவா் சோ்க்கையை டிச. 31-க்குள் நிறைவு செய்ய வேண்டும்.

மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களைப் பெறுதல் தொடா்பான கோப்பு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு கோப்பு ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெற அரசு நிா்வாகம் தொடா்ந்து முயல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 10 சதவீத உள் ஒதுக்கீடு நிகழ்கல்வி ஆண்டு எட்டாக் கனியாக மாறியுள்ளது. மேலும், நிகழாண்டு தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாகப் பெறுவதற்கும் வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.