ஏஎப்டி ஆலை மூடும் முடிவுக்கு ஆளுநர் கிரண் பேடியே காரணம்: அமைச்சர் குற்றச்சாட்டு
புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலை மூடும் முடிவுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடியே காரணம் என்று புதுவை தொழில் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலை மூடும் முடிவுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடியே காரணம் என்று புதுவை தொழில் துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் பாரம்பரியமாக இயங்கி வந்த ஏஎப்டி பஞ்சாலை மூடப்படும் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமைச்சர் ஷாஜகான் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
"ஏஎப்டி, சுதேசி பாரதி பஞ்சாலைகளில் விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி மீதம் இருக்கும் தொழிலாளர்களை கொண்டு இந்த இரண்டு ஆலைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து துணை நிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.
மேலும், 2019-இல் அனைத்து கட்சி போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட பல முடிவுகளில், இந்த இரண்டு ஆலைகளையும் தொடர்ந்து நடத்தவும், விருப்ப ஒய்வு கேட்பவர்களுக்கு மட்டும் அளிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இது சம்மந்தமாக ஒரு கோப்பு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், ஆளுநர் அதற்கு மாறாக இரு ஆலைகளையும் மூட வேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு எடுத்து அந்த கோப்பை திருப்பி அனுப்பினார். ஆளுநருக்கும், அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுக்கும் ஒரு மாறுபட்ட கருத்துகள் இருந்ததால், அந்த கோப்பு மத்திய அரசின் முடிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அக்கோப்பு இன்னமும் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. இதற்கிடையில் இந்த ஆலை ஊழியர்களுக்கு லேஆப் மாதாந்திர ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்க புதுவை பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டு, சட்டப்பேரவையில் ஒப்புதலும் பெறப்பட்டது.
தற்போது இந்த ஆலை ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கும் கோப்புக்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்துவிட்டார்.
உயர் நீதிமன்றம் உத்தரவின்படியும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தபடியும் இது முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டதால் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இருப்பினும், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், விதிமுறைகளுக்குள்பட்ட 50 ஆண்டுகால நடைமுறைகளை மீறும் வகையிலும், இந்த ஊதியம் வழங்கும் கோப்பை அதிகாரிகள் மூலமாக முதல்வர் மற்றும் துறை அமைச்சர் வழி செல்லாமல், ஆளுநர் அந்த கோப்பை பெற்று அந்த இரு ஆலைகளையும் மூடவேண்டும் என்று தன்னிச்சையாக முடிவு செய்துள்ளார்.
ஆலைகளை மூட வேண்டும் என்ற இந்த கோப்பும் முதல்வர் மற்றும் அமைச்சர் வழியாக செல்லவில்லை. இந்த ஆலைகள் தொடர்பாக அமைச்சரவை முடிவுக்கும், ஆளுநர் முடிவுக்கும் தொடர்பான கோப்பு மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் போது ஆலையை மூடும் வகையில் தன்னிச்சையாக ஆளுநர் எடுத்த முடிவு ஒரு ஆரோக்கிய சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை அரசு இந்த இரண்டு ஆலைகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்தது. எனவே துணை நிலை ஆளுநர் தங்கள் தன்னிச்சையான முடிவை மறுபரிசீலனை செய்து ஊழியர்களுக்கு மாதந்திர ஊதியம் அளிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் மற்றொரு கோப்பை துணை நிலை ஆளுநருக்கு, முதல்வர் மூலம் அனுப்பியுள்ளேன். எனவே ஆலை ஊழியர்களும் புதுவை அரசின் நிலைப்பாட்டை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் ஷாஜகான்.