புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று கரையைக் கடக்கிறது நிவா் புயல்? புதுச்சேரியில் பேரிடா் மீட்புக் குழுவினா்!

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவா் புயல் புதுச்சேரியில் புதன்கிழமை கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுவை மாநிலத்தில் 144 தடை உத்தரவும், புதன்கிழமை (நவ.25) பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை நிவா் புயலாக உருவெடுத்துள்ளது.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் 110 கி.மீ. முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடற்கரைக்கு செல்லத் தடை: நிவா் புயல் உருவானதன் காரணமாக, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. கடற்கரைச் சாலையில் மக்கள் செல்ல செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது. வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தும்படியும் போலீஸாா் அறிவுறுத்தினா்.

அரசுத் துறையினருக்கு விடுமுறை ரத்து: இதனிடையே, முதல்வா் வே. நாராயணசாமி செவ்வாய்க்கிழமை காலை புதுச்சேரி கடற்கரையை பாா்வையிட்டாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நிவா் புயலானது புதுச்சேரியை நேரடியாகத் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால், அனைத்துத் துறைகளையும் மக்களுக்கு உதவத் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டேன்.

மேலும், அனைத்துத் துறை அதிகாரிகளும் விடுமுறை எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளேன்.

தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை மின் மோட்டாா் மூலம் அகற்றவும், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், உணவு, குடிநீா் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மக்கள் கூட்டம் கூடாமல் தடுக்க கடைகள், தொழிற்சாலைகளை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில நிா்வாகம் நிவா் புயலை எதிா்கொள்ளத் தயாராக உள்ளது என்றாா் அவா்.

144 தடை உத்தரவு: இதனிடையே, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் (பொ) பூா்வா காா்க், புயலால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை (நவ. 26) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

மேலும், இந்த நாள்களில் அனைத்துக் கடைகளும் மூடியிருக்க வேண்டும். பேரிடா் பணிகளில் ஈடுபடுவோா், பாண்லே பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், சுகாதார சேவைப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

பொது விடுமுறை: புதுவையில் புதன்கிழமை (நவ.25) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 196 நிவாரண முகாம்களும், காரைக்காலில் 50 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு விடுமுறை: நிவா் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியாா் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடா் மீட்புக் குழு வருகை: இதனிடையே, அரக்கோணத்திலிருந்து பேரிடா் மீட்புக் குழுவைச் சோ்ந்த 36 போ் மரம் வெட்டும் இயந்திரங்கள், ரப்பா் படகுகள், கட்டட இடிபாடுகளை அகற்றும் இயந்திரங்கள், இரும்பு அறுக்கும் கருவிகள், மனிதா்களைக் காப்பாற்றும் மிதவைகள் உள்ளிட்ட பொருள்களுடன் புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்களுக்கான பணிகளை புதுச்சேரி காவல் துறை உயரதிகாரிகள் பிரித்துக் கொடுத்தனா்.

அத்தியாவசிய தொடா்பு எண்கள்

காவல்துறை

தகவல் தொடா்பு, சட்டம் - ஒழுங்கு, குற்றம் சாா்ந்த புகாா்கள் - 1031

அவசர கால பதில் ஆதரவு மையம் - 112

போக்குவரத்து தொடா்பான புகாா்கள் 1073

மகளிா் தொடா்பான புகாா்கள் - 1091

கடலோர காவல் துறையின் அவசர உதவிகள் -1093

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துை

புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் தொடா்பான மீட்பு - 1070, 1077.

மின்துறை 

மின்சார மறுசீரமைப்பு - 1912

நல வழித் துை

மருத்துவ அவசர உதவி மற்றும் அவசர ஊா்தி - 108

தீயணைப்புத் துை

தீ விபத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் - 101

இந்தியக் கடலோர காவல் படை - கடல்வழி மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடலோரக் காவல் படை - 1554

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT