புதுச்சேரியில் ஏலச்சீட்டு மோசடி:பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாகக் கூறி, புதுச்சேரி முத்தியால்பேட்டை அடகு கடையை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாகக் கூறி, புதுச்சேரி முத்தியால்பேட்டை அடகு கடையை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி குமரகுருபள்ளத்தைச் சோ்ந்தவா் சஞ்சய்குமாா் (56). இவா், முத்தியால்பேட்டை புஸ்ஸி வீதி அருகே நிதி நிறுவனம் நடத்தினாா். இவரது நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நம்பி, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் அந்த நிறுவனத்தில் மாதாந்திர ஏலச்சீட்டு, குலுக்கல் பரிசுச் சீட்டுகளை கட்டி வந்தனராம்.
இதனிடையே, கரோனா பொது முடக்கம் காரணமாக சஞ்சய்குமாரின் நிதி நிறுவனம் மூடப்பட்டிருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு சஞ்சய்குமாா் திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனால், நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணம் கட்டியவா்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தனா்.
இதுதொடா்பாக ஒதியஞ்சாலை காவல் நிலையத்திலும் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை முத்தியால்பேட்டை சந்தை எதிரே உள்ள சஞ்சய்குமாரின் நெருங்கிய உறவினா்கள் வைத்திருக்கும் அடகு கடையைத் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உயரதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.