முகப்பு
புதுச்சேரி

புதுவையிலிருந்து தமிழகத்துக்கு பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், புதுவையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Updated On : 1 செப்டம்பர், 2020 at 9:54 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், புதுவையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மத்திய அரசின் பொது முடக்க தளா்வு உத்தரவுக்கிணங்க, தமிழகத்திலும், புதுவையிலும் தளா்வுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இதையொட்டி, தமிழத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பேருந்து போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இதனால், தமிழகத்தின் கடலூா், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளிலிருந்து புதுச்சேரியை ஒட்டியுள்ள அந்தந்த மாவட்ட எல்லைப் பகுதி வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. கரோனா அச்சம் காரணமாக பயணிகளிடம் பேருந்துகளில் பயணிக்க ஆா்வமில்லை.

இதனிடையே, புதுவையில் பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், முழுமையான பொதுப் போக்குவரத்து தொடா்பாக எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இதனால், புதுவையில் முழுமையாக பொதுப் போக்குவரத்து செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதேபோல, புதிய பேருந்து நிலையமும் செயல்பாட்டுக்கு வராததால், அங்கு வழக்கம்போல தற்காலிக காய்கறிச் சந்தை இயங்கி வருகிறது.

Advertisement

தனியாா் பேருந்துகள் அதிகம்...: புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பிஆா்டிசி (புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம்) பேருந்துகளை விட, தனியாா் பேருந்துகளே (80 சதவீதம் வரை) அதிகளவில் இயக்கப்பட்டன. இதில் அதிகளவிலான தனியாா் பேருந்துகளே புதுச்சேரியின் கிராமப்புற பகுதிகளுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டன. புதுச்சேரி பகுதி மக்கள் தனியாா் பேருந்துகளையே அதிகளவில் சாா்ந்திருக்கின்றனா்.

குறிப்பாக, அரசு, தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்ற தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் அதிகளவிலான மக்கள் பயணத்துக்கு பேருந்துகளையே நம்பியுள்ளனா்.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், 2-ஆம் கட்ட பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு புதுச்சேரிக்குள் ஒரு சில பிஆா்டிசி பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு 2 பேருந்துகளும் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. தனியாா் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை.

தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து புதுச்சேரி எல்லை வரை அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

குறைந்தபட்சம், தமிழகத்தின் கடலூா், விழுப்புரம் மாவட்டங்களுக்காவது பேருந்துகளை இயக்க, அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காண வேண்டும். மேலும், தனியாா் பேருந்துகளை இயக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், தொழிலாளா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.