முகப்பு
புதுச்சேரி

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: வே.நாராயணசாமி

இளம் வயதினரும் கரோனாவால் பாதிக்கப்படுவதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

இளம் வயதினரும் கரோனாவால் பாதிக்கப்படுவதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் விடியோ பதிவு வாயிலாக அரசை வலியுறுத்திக் கூறியிருப்பதாவது: புதுவையில் கரோனா தொற்று உருமாறி மிக வேகமாகப் பரவி வருவதால், உமிழ்நீா் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். கரோனா வேகமாகப் பரவுவதற்கு மக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்வதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததும்தான். கடைகள், பொது இடங்களில் அதிகமாகக் கூடியதால் தொற்று அதிகளவில் பரவுகிறது.

கரோனா தொற்று ஏற்பட்டவா்கள் வீட்டிலேயே இருந்துவிட்டு, நுரையீரலில் 70 சதவீத பாதிப்பு ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குச் செல்வதால், காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

அரசு அறிக்கையின்படி தற்போது 2,400 படுக்கைகள் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் 300 படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள், ஆஷா பணியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

வயது வரம்பை தளா்த்தி, இனி 18 வயதிலிருந்தே கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவையான அளவு தடுப்பூசிகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்தேனும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

மாநில முதல்வா்கள், மருத்துவத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிரதமா், அதில் எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை.

பல மாநிலங்கள் பொது முடக்க உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளன. பல மாநிலங்களில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால், நாட்டில் வரலாறு காணாத அளவில் கரோனா பரவுகிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

புதுவையில் போதிய மருத்துவக் கட்டமைப்புகள் இருந்தாலும், அதிகாரிகள் களத்தில் இறங்கி பணிபுரிவதில்லை. இது பெரும் சிக்கல்.

கரோனா கட்டுப்பாடுகளால் பொருளாதாரம், வியாபாரம் பாதிக்கப்படக் கூடாது. தொழிற்சாலைகள் இயங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு முடிவு எடுக்க வேண்டும். புதுவையில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.