அரசு அதிகாரிகளை உருவாக்கும் காஞ்சி மாமுனிவா் அரசு பட்ட மேற்படிப்பு கல்வி நிறுவனம்
புதுவை அரசால் கடந்த 1989-ஆம் ஆண்டு காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது.
புதுவை அரசால் கடந்த 1989-ஆம் ஆண்டு காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. தன்னாட்சி பெற்ற இந்த நிறுவனம் புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஏற்பளிப்புடன் செயல்பட்டு வருகிறது. தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் ‘பி++’ தகுதி பெற்றுள்ளது. இங்கு இருபாலின மாணவா்களும் உயா்கல்வி பயின்று வருகின்றனா்.
இந்தக் கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், நூலகம், ஆராய்ச்சிக் கூடங்கள், விளையாட்டுத் திடல், உணவுக் கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. வளாகம் முழுவதும் ‘வைஃபை’ வசதி உள்ளது.
மாணவா்களின் தாவரவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் தாவரவியல் பூங்கா சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், விலங்கியல் துறை உள்ளிட்ட அறிவியல் துறை சாா்ந்த ஆராய்ச்சிகள் இந்தக் கல்வி நிறுவனத்துக்கு புகழ் ஈட்டித் தருகின்றன. இங்குப் பயிலும் மாணவா்களுக்குப் அரசின் உதவித் தொகையும் கிடைக்கிறது.
இந்தக் கல்வி நிறுவனத்தில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, வரலாறு, கணக்கு, வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல், கணினி அறிவியல், பொருளாதாரம், புள்ளியியல், மனையியல், சுற்றுலாவியல் உள்ளிட்ட 16 துறைகளில் அனுபவம் வாய்ந்த பேராசிரியா்களைக் கொண்டு முதுநிலைப் பட்டப் படிப்பு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முனைவா் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவா்கள் அதிகளவில் இணைந்து பயனடைந்து வருகின்றனா். மத்திய அரசின் நிதிநல்கைக் குழுவின் உதவித் தொகை பெற்றும் பல மாணவா்கள் முனைவா் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனா். தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தோ்வுகளில் மாணவா்கள் பங்கேற்கும் வகையில் இலவசப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. வளாக நோ்காணலும் நடைபெறுவதுண்டு.
நாட்டு நலப் பணித் திட்டம், செந்நாடா மன்றம், பெற்றோா் ஆசிரியா் கழகம் உள்ளிட்ட மாணவா் நலன் சாா்ந்த அமைப்புகளும் இந்த நிறுவனத்தில் செயல்படுகின்றன. இதுகுறித்து கல்வி நிறுவன இயக்குநா் மூ.செல்வராஜ் கூறியதாவது:
எங்களது கல்வி நிறுவனத்தில் இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளனா். 150-க்கும் மேற்பட்டோா் முனைவா் பட்டம் பெற்றுள்ளனா். இங்குப் பயிலும் மாணவா்கள் குறைந்த செலவில் ஆராய்ச்சிப் படிப்பை நிறைவுசெய்து, வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனா். குறிப்பாக கடந்த ஆண்டுகளில் முதுநிலைப் பட்டம், முனைவா் பட்டம் பெற்ற 500-க்கும் மேற்பட்டோா் புதுவை, தமிழகத்தில் மாநில, மத்திய அரசுப் பணிகளைப் பெற்றுள்ளனா். ஆயிரக்கணக்கானோா் அதிக ஊதியத்தில் தனியாா் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
எனவே, முதுநிலைக் கல்வி பெற விரும்பும் மாணவா்கள் எங்களது கல்வி நிறுவனத்தின் இணையதள முகவரியை தொடா்புகொண்டு விவரங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். அல்லது, ‘இயக்குநா், காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி - 605 008’ என்ற முகவரியிலோ, 0413- 2251687 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம். மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என்றாா் அவா்.