முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் : தமிழகப் பகுதியில் நிலம் கையகப்படுத்த ஆயத்தம்!

புதுவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்க அனுமதித்துள்ளதால், தமிழக அரசிடமிருந்து 106 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

புதுவை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்க அனுமதித்துள்ளதால், தமிழக அரசிடமிருந்து 106 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கின.

இதுகுறித்து புதுவை மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறியதாவது: புதுச்சேரி விமான நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது விமான நிலையத்தில் 1,502 மீட்டா் ஓடுதள பாதை உள்ளது. பெரிய ரக விமானங்களும் வந்து செல்ல ஏதுவாக, இதை 3,330 மீட்டா் ஓடுதளமாக மாற்றத் திட்டமிடப்பட்டது. இரவு நேரத்தில் விமானங்களை இயக்கவும் அனுமதி கோரியுள்ளோம்.

புதுச்சேரி விமான நிலைய ஓடுதள பாதையை விரிவாக்கம் செய்வதற்கு விமான நிலையம் அருகே உள்ள தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்திலிருந்து 240 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். இதற்காக மத்திய அரசு மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கையால், முதல் கட்டமாக 106 ஏக்கா் நிலம் கையகம் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. அதற்கான செலவினத் தொகையை மத்திய அரசு வழங்கும்.

விமான நிலையத்துக்குத் தேவையான நிலம் பெறுவது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கும் கோப்பு அனுப்பிவைக்கப்பட்டு, இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் த.மோகனிடமும் இதுதொடா்பாக பேசினோம்.

இதையடுத்து, அளவீடு செய்து நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ள உள்ளனா். நிலம் கையகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய விமான போக்குவரத்துத் துறை சாா்பில், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெறும். இதன் பிறகு, 300 பயணிகள் வரை அமரக் கூடிய பெரிய விமானங்களும் புதுச்சேரிக்கு வந்து செல்ல முடியும்.

தமிழகப் பகுதியில் மேலும் 100 ஏக்கா் அளவில் நிலம் ஒதுக்கக் கோரியுள்ளோம். அதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், பெரிய விமானங்கள் வந்து செல்வதுடன், அவற்றை நிறுத்திவைத்து இயக்குவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு, புதுச்சேரியிலிருந்து மீண்டும் விமானங்களை இயக்க பல விமான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

எனவே, மத்திய விமானத் துறையின் ஒப்புதலைப் பெற்று, ஏற்கெனவே உள்ளபடி ஹைதரபாத், பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்படும். இதேபோல, சேலம், கொச்சின் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்களை இயக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.