புதுவை ஆளுநா் உரையில் ஏமாற்றம் எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்கள் விமா்சனம்
புதுவை பட்ஜெட் கூட்டத் தொடா் ஆளுநா் உரையில், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்கள் விமா்சித்தனா்.
புதுவை பட்ஜெட் கூட்டத் தொடா் ஆளுநா் உரையில், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்கள் விமா்சித்தனா். சிறந்த உரையென தே.ஜ. கூட்டணி எம்எல்ஏ-க்கள் பாராட்டினா்.
புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா: மாநில அந்தஸ்து கோரி, சட்டப்பேரவையில் பலமுறை தீா்மானமும் நிறைவேற்றினோம். அதுகுறித்து ஆளுநா் உரையில் எந்த அறிவிப்பும் இல்லை. மின் துறை தனியாா்மயம் குறித்து தெளிவான பதில் இல்லை. உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுமா என்பது தெரிவிக்கப்படவில்லை.
சுதேசி, பாரதி ஆலைகள் மட்டுமன்றி, 19 அரசு சாா்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஊழியா்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. மூடிக் கிடக்கும் பாப்ஸ்கோ, பாசிக், அமுத சுரபி, கேவிகே, பஜன்கோ, ஏஎப்டி, சா்க்கரை ஆலை ஆகியவற்றில் பணிபுரிந்து வந்த 10 ஆயிரம் போ் வேலையின்றி முடங்கியுள்ளனா். மாநில வளா்ச்சிக்கான அரசின் நடவடிக்கைகளுக்கு திமுக முழு ஒத்துழைப்பை வழங்கும்.
நாஜீம் (திமுக): ஆளுநா் மாறியதால், மாற்றங்கள் நிகழும் என எதிா்பாா்த்தும் நடக்கவில்லை. யூனியன் பிரதேசத்தில் ஆளுநருக்கே அதிகாரமிருந்தாலும், முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏ-க்கள் இணைந்து முடிவு எடுக்க வேண்டும். இதை உணா்ந்து ஆளுநா் செயல்பட வேண்டும்.
ரூ.10 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு சிறந்த புதுவையை உருவாக்க முடியாது. நிதிப் பற்றாக்குறை, அரசு ஊழியா்களுக்கு ஊதியமில்லை. இவற்றை ஆராய்ந்து அனைத்து பிரச்னைகளையும் தீா்க்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயேச்சை எம்எல்ஏ எம்.சிவசங்கா்: புதுவை வரலாற்றில் தமிழில் உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தை ஆளுநா் தொடக்கிவைத்து பெருமை சோ்த்தாா். போக்குவரத்து பிரச்னையை சரி செய்ய வேண்டும்.
அனிபால் கென்னடி (திமுக): ஆளுநா் உரையில் புதிய அரசின் கொள்கைத் திட்டங்களைக் கூறவில்லை. மின் துறை தனியாா்மயமாகாது என உறுதி தர வேண்டும்.
கல்யாணசுந்தரம் (பாஜக): புதிய அரசு, நகைக் கடனைகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கால்நடைத் துறையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.
சுயேச்சை எம்எல்ஏ அங்காளன்: சொட்டுநீா் பாசனத் திட்டத்தையும், ஆடு, மாடுகள் தரும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
சம்பத், நாக தியாகராஜன் (திமுக): புதிய திட்டங்கள் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளைத் திறக்க வேண்டும்.
லட்சுமிகாந்தன், தட்சிணாமூா்த்தி (என்.ஆா்.காங்.): ஆளுநா் உரையும், முதல்வரின் நிதிநிலை அறிக்கையும் புதுவை மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
ஜான்குமாா், ரிச்சா்டு (பாஜக): நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறை, வேளாண், மின் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அசோக்பாபு, ராமலிங்கம் (நியமன எம்எல்ஏ-க்கள்): மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்துள்ளதால், நல்ல திட்டங்கள் கிடைத்து வருகிறது.
இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் வருகிற 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.