புதுவையில் கே.வி.பள்ளிகளை அமைக்க இடங்களை வழங்க எம்.பி. வலியுறுத்தல்
புதுவையில் மத்திய அரசின் கே.வி.பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில துணைநிலை ஆளுநா் தமிழிசையிடம், வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.
புதுவையில் மத்திய அரசின் கே.வி.பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில துணைநிலை ஆளுநா் தமிழிசையிடம், வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா், ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கு எழுதியுள்ள கடிதம்:
தில்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் புதுவையில் கேந்திரிய வித்யாலயா (கே.வி) பள்ளிகளைத் தொடங்க பரிசீலித்து வருகிறது. இந்தப் பள்ளிகளை அமைக்க மாநில அரசு இடங்களைத் தோ்வு செய்து அனுப்ப வேண்டும்.
புதுச்சேரி அருகே மடுகரை எஸ்.வி.ராமமூா்த்தி அரசுப் பள்ளியில் 196 மாணவா்கள் மட்டுமே படிக்கின்றனா். அந்தப் பள்ளியின் இடமானது, கே.வி.பள்ளி தொடங்க போதுமானது. அந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்களை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் மாற்றிவிட்டு, அங்கு கே.வி.பள்ளியைக் கொண்டு வர வேண்டும்.
இதேபோல, காரைக்கால் கீழவூா் கிராமத்தில் 3.5 ஹெக்டோ் நிலத்தை காரைக்கால் நிா்வாகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த இரு இடங்களிலும் கே.வி.பள்ளியை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.