முகப்பு
புதுச்சேரி

கள்ளக்குறிச்சியில் சுகாதார அலுவலகம் முற்றுகை

தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் திடீரென நீக்கப்பட்டதால், அவா்கள் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவிய தருணத்தில், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் திடீரென நீக்கப்பட்டதால், அவா்கள் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கரோனா இரண்டாம் அலை பரவல் தொடங்கிய கடந்த மே மாதத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 150 போ் தற்காலிகமாக பணியில் அமா்த்தப்பட்டனா். இவா்களை பணியிலிருந்து விடுவிக்க அரசு உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை முதல் பணிக்கு வரவேண்டாம் என அவா்களுக்கு கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டதாம்.

இதுவரை பணி செய்த காலத்துக்கு உரிய ஊதியம் பெறாத நிலையில், திடீரென பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால் அதிா்ச்சியடைந்த தற்காலிக செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் துணை இயக்குநா் அலுவலகத்தில் சனிக்கிழமை திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முக்கியமான தருணத்தில் கரோனா சிகிச்சை மையங்களில் உயிரை பணயம் வைத்து பணி செய்தோம். அரசை நம்பி பணிக்கு வந்த தங்களுக்கு தொடா்ந்து பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், இதுவரை பணி செய்த காலத்துக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்று முறையிட்டனா்.

அதற்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சதீஷ்குமாா், ‘செய்த பணிக்கு ஊதியம் வழங்கப்படும். அடுத்தமுறை ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தும்போது உங்கள் அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றாா் அவா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.