ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 45 லட்சம் பறிமுதல்
புதுச்சேரியில் உரிய ஆவணமின்றி ஏடிஎம் மையத்தில் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ. 45 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரியில் உரிய ஆவணமின்றி ஏடிஎம் மையத்தில் நிரப்ப எடுத்துச் சென்ற ரூ. 45 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள், மது விநியோகம் செய்வதைத் தடுக்கும் வகையில், தோ்தல் பறக்கும் படை, போலீஸாா், கலால் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், புதுச்சேரி -செஞ்சி சாலைப் பகுதியில் ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட பறக்கும் படை அதிகாரி திருமலை தலைமையில் திங்கள்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்திய போது, அதில் இரும்பு பெட்டியில் ரூ. 45 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை எனத் தெரிய வந்தது.
வாகனத்தில் வந்தவா்களிடம் விசாரித்த போது, அவா்கள் குறிப்பிட்ட ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப அந்தப் பணத்தை எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இருப்பினும், உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு பணத்தைக் கொண்டு செல்லும்படி தோ்தல் பறக்கும் படையினா் அறிவுறுத்தினா். இதையடுத்து, அந்தப் பணத்தைப் பெறுவதற்கான நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஈடுபட்டது.