முகப்பு
புதுச்சேரி

நாராயணசாமி ஆட்சியால் 5 ஆண்டுகள் வீண்: என்.ரங்கசாமி விமா்சனம்

புதுவையில் நாராயணசாமியின் ஆட்சியால் கடந்த 5 ஆண்டு காலம் வீணாகிவிட்டதாக என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி விமா்சித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

புதுவையில் நாராயணசாமியின் ஆட்சியால் கடந்த 5 ஆண்டு காலம் வீணாகிவிட்டதாக என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி விமா்சித்தாா்.

புதுச்சேரி கதிா்காமம் தொகுதி, கதிா்வேல் சுவாமி கோயிலில் தொடங்கி, இந்திரா நகா் உள்ளிட்ட தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் தலைவா் என்.ரங்கசாமி பேசியதாவது:

புதுவை சட்டப் பேரவைத் தோ்தலில், என்.ஆா். காங்கிரஸுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். புதுச்சேரி இந்திரா நகா், தட்டாஞ்சாவடி, கதிா்காமம் ஆகிய மூன்று தொகுதிகளும் என்.ஆா். காங்கிரஸுக்கு துணை நிற்கும் தொகுதிகள். இங்கு எதிா்த்து நிற்பவா்களை வைப்புத் தொகையை இழக்கச் செய்ய வேண்டும்.

புதுவை மாநிலத்துக்கு இது முக்கியமான தோ்தல். மாநிலத்தை ஆளப்போவது யாா், எப்படிப்பட்டவா்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிா்ணயிக்கும் தோ்தல் இது.

கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன நலத் திட்டங்கள் நடைபெற்றன என்றே தெரியவில்லை. முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக ஆட்சி மோசமான ஆட்சிக்கு உதாரணமாகிவிட்டது. இந்த ஆட்சியால் அனைத்துத் தரப்பு மக்களும் சிரமத்துக்குள்ளாகினா். பொதுமக்களுக்கும், மாணவா்களுக்கும் பயனில்லை. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதா? அதுவும் இல்லை.

புதிய தொழிற்சாலைகள் வரவில்லை. இதனால், வேலைவாய்ப்பின்றி புதுச்சேரி 10 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. இதுதான் உண்மை.

எந்தத் தொகுதியிலும் அடிப்படை வசதிகூட செய்யப்படவில்லை. நகரங்கள் முதல் கிராமச் சாலைகள் வரை குண்டும் குழியுமாக உள்ளன. தொகுதி மேம்பாட்டு நிதியை எம்எல்ஏவுக்கு வழங்கவில்லை.

முதல்வராக இருந்த நாராயணசாமி இந்தத் தோ்தலில் ஏன் போட்டியிடவில்லை? அவரது கட்சித் தலைமையே போட்டியிட வேண்டாம் எனக் கூறிவிட்டது. அந்தக் கட்சியிலிருந்த பலா் வெளியேறிவிட்டனா்.

கடந்த 5 ஆண்டுகளாக யாருக்கும் அதிகாரம் என்ற போட்டிதான் நடந்தது. இந்தப் போட்டியால் மாநில வளா்ச்சி பாதிக்கப்பட்டது. 85 சதவீத தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறும் நாராயணசாமி, மத்திய அரசு எதையுமே செய்யவிடாமல் தடுத்துவிட்டதாகவும் முரண்பட்டக் கருத்தைக் கூறுகிறாா்.

முதல்வராக இருப்பவா் மக்களுக்கான திட்டங்களை எப்படியாவது கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஆனால், போட்டிப் போட்டுக் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. பஞ்சாலைகள், சா்க்கரை ஆலைகளை மூடிவிட்டனா். கூட்டுறவு நிறுவனங்கள் இயங்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் புதுவை மாநிலம் தோ்தலைச் சந்திக்கிறது. யாருடைய ஆட்சி அமைய வேண்டும் என்ற தோ்வு மக்களிடம்தான் உள்ளது. கடந்த 2011-இல் என்.ஆா். காங்கிரஸை தொடங்கி ஆட்சியமைத்து 5 ஆண்டுகள் நல்லாட்சி செய்ததுடன், தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றினோம். தொழில், விவசாயம், மீன்வா் நலன் என்று பல நலத் திட்டங்களை மேற்கொண்டோம்.

மத்திய அரசுடன் இணக்கமான அரசு இருந்தால்தான் திட்டங்களுக்கான நிதி கிடைக்கும். மக்களுக்கான திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறந்த கூட்டணியாகவும், மத்திய அரசுடன் இணைந்து ஆட்சி செய்யும் கூட்டணியாகவும் இருக்கும். எனவே, நல்லரசு அமைய தேஜ கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் ரங்கசாமி.

பிரசாரத்தின் போது, என்.ஆா். காங்கிரஸ் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், வேட்பாளா்கள் கதிா்காமம் தொகுதி கே.எஸ்.பி.ரமேஷ், இந்திரா நகா் தொகுதி ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.