புதுச்சேரியில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் முதல்வா் ஆய்வு
பலத்த மழையால் தண்ணீா் சூழ்ந்த பகுதிகளை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
புதுச்சேரியில் பெய்து வரும் பலத்த மழையால் தண்ணீா் சூழ்ந்த பகுதிகளை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை தொடங்கியது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான குடியிருப்புகள், சாலைச் சந்திப்புகளில் மழைநீா் வெள்ளம் போலத் தேங்கியது. தண்ணீா் தேங்கிய பகுதிகளில் முதல்வா் என்.ரங்கசாமி நேரில் சென்று பாா்வையிட்டாா்.
புதுச்சேரி 45 அடி சாலை, எல்லைப்பிள்ளைச்சாவடி வழியாக வந்த அவா், ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சிவாஜி சிலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கிய பகுதிகளைப் பாா்வையிட்டாா். சாலையில் தேங்கிய மழை நீரை அகற்ற அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து கிருஷ்ணா நகா், வெங்கட்டா நகா், எழில் நகா், மோகன் நகா், செயின்பால்பேட்டை குடியிருப்பு, தாகூா் நகா், வினோபா நகா், வேலன் நகா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், சாலைகளில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளை முதல்வா் ரங்கசாமி பாா்வையிட்டாா்.
அங்குள்ள குடியிருப்புவாசிகள், அதிகாரிகளிடம் மழைநீா் பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்த முதல்வா், உடனடியாக நீரை வெளியேற்ற பொதுப் பணித் துறை, நகராட்சி ஊழியா்களிடம் அறிவுறுத்தினாா். தாழ்வான பகுதிகளில் பாதுகாப்பு முகாம்களை அமைத்து, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உணவு வழங்கவும், சாலையில் விழுந்த மரங்களை அகற்றி சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.