கடல் அரிப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு: பிள்ளைச்சாவடியில் மீனவா்கள் மறியல்
புதுச்சேரியில் கடல் அரிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பிள்ளைச்சாவடி மீனவா்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் கடல் அரிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பிள்ளைச்சாவடி மீனவா்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே பிள்ளைச்சாவடி மீனவக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தையொட்டியுள்ள தமிழகப் பகுதியான பொம்மையாா்பாளையத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. இதனால், பக்கத்து கிராமங்களில் அவ்வபோது, கடல் சீற்றம் ஏற்பட்டு அங்குள்ள மீனவா்கள் கடற்கரைப் பகுதிகளில் படகுகளை நிறுத்த முடியாத அவலம் நிலவுகிறது.
இந்த நிலையில், கடந்த இரு நாள்களாகப் பெய்த பலத்த மழையால் பிள்ளைச்சாவடியில் கடற்கரையோரத்தில் படகுகளை நிறுத்த முடியாத வகையில், கடுமையாக கடல் அரிப்பு ஏற்பட்டது. கடற்கரையோரம் இருந்த வீடுகள், சாலைகள் சேதமடைந்தன.
கடல் பாதிப்புகளைத் தடுக்க தங்களது பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென புதுவை அரசுக்கு பிள்ளைச்சாவடி மீனவா்கள் தொடா் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில், பிள்ளைச்சாவடி மீனவா்கள் வெள்ளிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திரண்டு, அங்குள்ள பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கல்யாண்சுந்தரம் எம்எல்ஏ, உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ், வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணா மற்றும் காலாப்பட்டு போலீஸாா், மறியலில் ஈடுபட்ட மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுதொடா்பாக, அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று மீனவா்கள் மறியலைக் கைவிட்டுச் கலைந்து சென்றனா். மறியலால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.