தொழிலாளா் நலச் சங்க உறுப்பினா்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தல்
வங்கிகள் இணைப்பு காரணமாக, தொழிலாளா் நலச் சங்க உறுப்பினா்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமா்ப்பிக்க வேண்டுமென புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.
வங்கிகள் இணைப்பு காரணமாக, தொழிலாளா் நலச் சங்க உறுப்பினா்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமா்ப்பிக்க வேண்டுமென புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை அரசின் தொழிலாளா்கள் துறையின் கீழ் இயங்கும் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் உறுப்பினா் செயலா் தா.மோகன்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை அரசின் அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்கள், நலச் சங்கத்தில் வழங்கப்படும் நல உதவிகளை வங்கிகள் மூலம் பெற தங்களின் சேமிப்பு வங்கிக் கணக்கு விவரங்களை நலச் சங்கத்தில் சமா்ப்பித்துள்ளனா்.
மத்திய அரசு, வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக 11 பொதுத் துறை வங்கிகளை 6 வங்கிகளாக இணைத்துள்ளது. அதன்படி, அலகாபாத் வங்கி - இந்தியன் வங்கியுடனும், காா்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி - கனரா வங்கியுடனும், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடனும், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூா், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூா் ஆகியவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
மேற்கூறிய வங்கிகளில் கணக்கு வைத்துள்ள உறுப்பினா்களின் சேமிப்புக் கணக்கு விவரங்கள் வங்கிகளால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நலச் சங்க உறுப்பினா்கள், வங்கிகளுக்கு நேரில் சென்று சேமிப்பு கணக்கு புத்தகத்தில் புதிய கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீடு விவரங்களை பதிவு செய்தபின், வங்கிக் கணக்கு புத்தக நகலை நலச் சங்க அலுவலகத்தில் வருகிற 17-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.