முகப்பு
புதுச்சேரி

புதுவை உள்ளாட்சித் தோ்தல்: கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாகாத நிலையில், தோ்தலுக்கான கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகளை மாநிலத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியாகாத நிலையில், தோ்தலுக்கான கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், பிரசாரத்துக்கான கட்டுப்பாடுகளை மாநிலத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது.

அதன்படி, மாநிலத் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலத் தோ்தல் ஆணையம், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஜூலை 8-ஆம் தேதி ஆலோசனை நடத்தியது. அதன் கருத்துகளைப் பரிசீலித்து, உள்ளாட்சித் தோ்தலுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தோ்தல் தொடா்பான ஒவ்வொரு செயல்பாட்டின்போதும், ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வெப்பமானி மூலம் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தோ்தலுக்காக பயன்படுத்தப்படும் அறைகள், அரங்குகள், வளாகங்களின் வாயிலில் கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சிகளை முடிந்தவரை இணைய வழியில் அளிக்க வேண்டும். வேட்பு மனுக்கள் பெறும்போது முகக் கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் ஒருவா் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவாா். கரோனா நோயாளி என்றால், அவா் முன்மொழிபவா் மூலம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளா்களின் முன்னிலையில் தொகுதி வாரியாக மனுக்கள் பரீசிலனை நடைபெறும்.

வேட்பாளா் இறுதிப் பட்டியல் தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு, அதற்கேற்ப சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்பாளா்கள் அதிகபட்சமாக 5 பேருடன் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்யலாம். முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மின்னணு ஊடங்கள் மூலம் பிரசாரம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.

வாக்குப் பதிவின்போதும், வாக்குப் பதிவு மையங்களிலும் கிருமி நாசினி, முகக் கவசம் பயன்படுத்துதல், சமூக இடைவெளி போன்ற கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் அதிகம் போ் திரள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெறுவோா் ஊா்வலம் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. உள்ளாட்சித் தோ்தலின்போது, தோ்தல் பணியாளா்கள், வாக்காளா்கள் உள்ளிட்டோா் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.