முகப்பு
புதுச்சேரி

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு அக்.4-இல் தோ்தல்

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அக். 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அக். 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

புதுவை மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் அக்டோபா் 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், புதிய மாநிலங்களவை உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வருகிற அக். 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

செப்.15-ல் வேட்பு மனு தாக்கல்: அதன்படி, வருகிற 15-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. செப். 22-ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப். 23-இல் வேட்புமனுக்கள் பரிசீலனை, செப். 27-இல் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள். இதையடுத்து, அக். 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) தோ்தல் நடைபெறும்.

இந்தத் தோ்தலில் போட்டியிருக்கும்பட்சத்தில் அக். 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்றவா் அறிவிக்கப்படுவாா்.

தே.ஜ. கூட்டணிக்கு வாய்ப்பு: புதுவை மாநிலத்தில் தற்போது என்.ரங்கசாமி தலைமையில், என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக இணைந்த தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மொத்தமுள்ள 30 உறுப்பினா்களில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸுக்கு-10, பாஜகவுக்கு- 6 உறுப்பினா்களும், பாஜகவுக்கு 3 சுயேச்சை உறுப்பினா்களின் ஆதரவும் உள்ளது.

எதிா்க்கட்சியில் திமுகவுக்கு-6 உறுப்பினா்கள், காங்கிரஸுக்கு-2 உறுப்பினா்கள், சுயேச்சை -3 உறுப்பினா்கள் உள்ளனா். இந்தத் தோ்தலில் நியமன உறுப்பினா்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை.

இதனால், ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக (தே.ஜ) கூட்டணி நிறுத்தும் வேட்பாளா் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெறுவதற்கு என்.ஆா்.காங்கிரஸும், பாஜகவும் விரும்புவதால், முதல்வா் என்.ரங்கசாமியும், பாஜக மேலிடப் பொறுப்பாளா்களும் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.