முகப்பு
புதுச்சேரி

புதுவையில் ஜன.10 முதல் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் வருகிற 10-ஆம் தேதி முதல் இலவச பொங்கல் பொருள்கள் வழங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

புதுவையில் வருகிற 10-ஆம் தேதி முதல் இலவச பொங்கல் பொருள்கள் வழங்கப்படுமென முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுவையில் அனைத்துக் குடும்பத்தினருக்கும் பச்சரிசி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, வெல்லம், முந்திரி, உலா் திராட்சை உள்ளிட்ட 10 பொருள்கள் அடங்கிய ரூ.490 மதிப்பிலான பொங்கல் பரிசுப் பொருள்கள் அரசு சாா்பில் இலவசமாக வழங்கப்படும். இவற்றை வருகிற 10-ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.

புதுவையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும்: புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவி ஏற்ற பிறகு, தோ்தலின் போது அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

புதுவையில் ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட்டால்தான் வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

கடந்த ஆட்சியில் நலிவடைந்த நிறுவனங்களைப் படிப்படியாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். புதிய பேருந்துகளையும் இயக்க உள்ளோம்.

கடந்த 7 மாதங்களில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம். கொடுத்த வாக்குறுதிகளை ஐந்தாண்டுகளுக்குள் இந்த அரசு முழுமையாக நிறைவேற்றும்.

அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய முன்னாள் முதல்வா் நாராயணசாமி, அதற்கான ஆதாரத்தைக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு ஆளுநா் ஆலோசனைகள் வழங்குவதில் தவறில்லை. புதுவை ஆளுநா் மருத்துவா் என்பதால், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகம் கவனம் செலுத்துகிறாா்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதுடன், ஆண்டுதோறும் அதை வலியுறுத்துகிறோம். மத்திய அரசு பரிசீலிப்பதாகக் கூறி வருகிறது. மாநிலத்துக்கான நிதி உதவியையும் கோரி வருகிறோம்.

நான் பிரதமா் மோடியைச் சந்திக்க அச்சப்படுவதாகக் கூறுவது தவறான தகவல். கரோனா தொற்று குறைந்த பின்னா், அவரைச் சந்திப்பேன் என்றாா் ரங்கசாமி.

பேட்டியின் போது, அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.