முகப்பு
புதுச்சேரி

காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்:வியாபாரி உள்பட இருவா் பலி

புதுச்சேரியில் புதன்கிழமை காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் வியாபாரி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

புதுச்சேரியில் புதன்கிழமை காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் வியாபாரி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சோ்ந்தவா் முத்துக்குமாரசாமி (55). மளிகைக் கடை நடத்தி வந்தாா். இவரது அண்ணன் மகளின் திருமணம் புதுச்சேரியிலுள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க முத்துக்குமாரசாமி தனது காரில் புதன்கிழமை அதிகாலை வீட்டில் இருந்து புறப்பட்டாா். காரை அதே பகுதியைச் சோ்ந்த முத்து (50) ஓட்டினாா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் ஜெயா நகா் அருகே காா் வந்த போது, எதிரே இந்திரா காந்தி சிக்னலில் இருந்து வில்லியனூா் நோக்கிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி எதிரே வந்த பைக் மீது மோதாமலிருக்க வலதுபுறம் திரும்பியது.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புக் கட்டையில் மோதி எதிரே வந்த முத்துகுமாரசாமியின் காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியது. இதில் காா் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் காரிலிருந்த முத்துக்குமாரசாமி, ஓட்டுநா் முத்து ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், சரக்குப் பெட்டக லாரியின் ஓட்டுநரும், மோட்டாா் சைக்கிளில் வந்தவரும் லேசான காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த புதுச்சேரி வடக்குப் பிரிவு போக்குவரத்து போலீஸாா் விரைந்து வந்து உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

விபத்து குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.