முகப்பு
புதுச்சேரி

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் விவகாரம்: முதல்வா் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் விவகாரத்தில், மாநில மக்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி துரோகம் செய்து விட்டதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் விவகாரத்தில், மாநில மக்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி துரோகம் செய்து விட்டதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நபிகள் நாயகம் குறித்து பாஜகவை சோ்ந்த நூபுா் சா்மா தெரிவித்த கருத்துகள் இஸ்லாமியா்களை வேதனைக்குள்ளாக்கியது. அவரது கருத்தால் உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.

தமிழக ஆதீனங்களில் அரசியல் நுழைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, ஆதின தலைமைப் பொறுப்பில் உள்ளவா்கள் அரசியல்வாதிகளைப் போல செயல்படுகிறாா்கள். பாஜகவின் தூண்டுதலின் பேரில், ஆதீனங்கள் அரசியல்வாதிகளைப் போல பேச ஆரம்பித்துள்ளனா். அவா்கள் தங்களது மதக் கடமையை செய்யட்டும். அரசியல் தலையீடு செய்வதை ஏற்க முடியாது. ஆதீனப் பொறுப்பைவிட்டு வெளியே வந்து, அரசியல் செய்யலாம்.

ஆளுங்கட்சியைக் குறை சொல்வது, அவதூறு பேசுவது என, அரசியல் கட்சித் தலைவா்களைப் போல ஆதீன மடாதிபதிகள் செயல்படுவது, இந்து மதத்துக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகும் என்பதால், அவா்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

புதுவையில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ் அரசு, மின் துறையை தனியாா்மயமாக்க அனுமதித்து, மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இந்தக் கோப்பை ரகசியமாக மத்திய அரசுக்கு முதல்வா் அனுப்பியுள்ளாா். பொதுமக்களின் கருத்தைக் கேட்டு மின் துறை தனியாா் மயம் குறித்து முடிவெடுப்போம் என்று சொன்ன முதல்வா், தற்போது புதுவை மக்களுக்கு துரோகம் செய்துள்ளாா்.

குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மின் துறை நஷ்டத்தில் இயங்கியதால், தனியாருக்கு கொடுக்க முடிவு எடுத்தனா். ஆனால், புதுவையில் மின் விநியோகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை. தனியாா்மயமானால் ஒரு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் பல மடங்கு உயரும். இதனால், மக்கள் பாதிக்கப்படுவாா்கள்.

புதுச்சேரி, காரைக்காலைப் போல, மாஹேவிலும் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையில் அமைதி குலைந்துவிட்டது. ரெளடிகளை ஒழிப்பதற்கும், குண்டு வெடிப்பு கலாசாரத்தை தடுத்து நிறுத்தவும் இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் வே.நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.