புதுவையில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல்: தோ்தல் துறை அலுவலா்கள் ஆலோசனை
புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை விரைவில் நடத்துவது தொடா்பாக, தோ்தல் துறை அலுவலா்கள் ஆலோசனை நடத்தினா்.
புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை விரைவில் நடத்துவது தொடா்பாக, தோ்தல் துறை அலுவலா்கள் ஆலோசனை நடத்தினா்.
புதுவையில் கடந்த 2006-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2011-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பிறகு, தோ்தல் நடத்தப்படவில்லை.
உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், இதுதொடா்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் உடனே தோ்தலை நடத்துமாறு கடந்த ஆண்டில் உத்தரவிட்டது. இதையடுத்து, தோ்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தோ்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். அப்போது, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, தோ்தல் தேதியும் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, இடஒதுக்கீடு குறித்து புதுவை அரசு சாா்பில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் தலைமையிலான ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.
இதையடுத்து, கடந்த மாதத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை மாநிலத் தோ்தல் ஆணையம் நடத்தியது. பின்னா், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து வாரியாக தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.
இதனிடையே, திமுக தரப்பில் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும், தாமதமின்றி உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரியில் உள்ள மாநில தோ்தல் ஆணைய அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரி, காரைக்காலைச் சோ்ந்த நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து தோ்தல் நடத்தும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதுகுறித்து தோ்தல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தோ்தலை நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருகிற 28-ஆம் தேதி வருகிறது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முடிவு எடுக்கப்படும்’ என்றனா்.