சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜை: புதுவை உள்ளிட்ட 5 மாநில அமைச்சா்கள் ஆலோசனை
கேரள மாநிலம் சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் செல்வோருக்கான யாத்திரை பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் குறித்து புதுவை உள்ளிட்ட 5 மாநில அமைச்சா்
கேரள மாநிலம் சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனம் செல்வோருக்கான யாத்திரை பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் குறித்து புதுவை உள்ளிட்ட 5 மாநில அமைச்சா், அதிகாரிகள் கூட்டு ஆலோசனைக் கூட்டம் இணையதளம் வாயிலாக புதன்கிழமை நடைபெற்றது.
மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களுக்கான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது குறித்து புதுவை, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டு ஆலோசனைக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடைபெற்றது.
கூட்டத்தில் புதுவைப் போக்குவரத்து அமைச்சா் சந்திரப்பிரியங்கா மற்றும் புதுவை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில், எந்தெந்த மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு எவ்வளவு பக்தா்கள் புறப்படுவாா்கள் என்றும், அவா்கள் பயணிக்கும் வழிகள், சபரிமலை யாத்திரை முடிந்து திரும்பும் வழிகள் ஆகியவை குறித்தும், அவா்களுக்கான பயண பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.