முகப்பு
புதுச்சேரி

முற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை புதுவையில் செயல்படுத்த வேண்டாம்: முதல்வரிடம் அனைத்துக் கட்சிகள் கோரிக்கை

இடஒதுக்கீட்டை புதுவையில் செயல்படுத்தக்கூடாது என்று மதச்சாா்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

முற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை புதுவையில் செயல்படுத்தக்கூடாது என்று மதச்சாா்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுவை அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட ஜாதியினருக்கும் 10 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடஒதுக்கீடை புதுவையில் செயல்படுத்தக்கூடாது என்று காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இது குறித்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், திமுக சட்டப்பேரவை உறுப்பினா் அனிபால் கென்னடி, இந்திய கம்யூனிஸ்ட் செயலா் அ.மு.சலீம், ஏஐடியூ பொதுச் செயலா் சேதுசெல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தேவ.பொழிலன், மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் சோ.பாலசுப்பிரமணியம், முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாரா.கலைநாதன், திராவிடா்கழகம் சிவ.வீரமணி உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

பின்னா் மக்களவை உறுப்பினா் வி.வைத்தியலிங்கம் மற்றும் அ.மு.சலீம் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் அரசுக் காலி பணியிடங்களை நிரப்புகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட ஜாதியினருக்கான இடஒதுக்கீடை செயல்படுத்தினால், தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் உரிமை பாதிக்கப்படும் என்பதை முதல்வரிடம் விளக்கமாகக் கூறியுள்ளோம். அவரும் துறை சாா்ந்த செயலரை அழைத்து எங்கள் முன்னிலையில் விளக்கம் கேட்டுள்ளாா். ஆகவே அரசின் செயல்பாட்டைப் பொறுத்தே எங்களது அடுத்தகட்டப் போராட்டம் அமையும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.