புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான தனிப்பிரிவை தொடங்கி வைத்த அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தனியார் ஆய்வு தெரியவந்துள்ளது. அது சரியா என அரசு சார்பிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். ஆனாலும் சர்க்கரை நோய் பிரிவு நோயாளிகளுக்கு டிஜே அளிக்க தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து சாதனங்களும் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தில் லஞ்சம் ஊழல் நடைபெற்றால் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். இதுகுறித்து அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி உள்ளேன். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் தாமதமானதால் தற்போது அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும், திட்டங்களும் வெளிப்படையான மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நிறைவேற்றப்படுகிறது. ஆகவே ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆதாரமின்றி குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது சரியல்ல. மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்க வைப்பது குறித்த புகார்கள் உள்ளன. அந்த அறையையும் நேரில் பார்வையிட்டேன். இடபற்றாக்குறையால் அது போன்ற நிலை ஏற்படுகிறது.
ஆகவே ரூ. 42 கோடி செலவில் புதிதாக அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டவும் ஒப்புதல் வழங்கியுள்ளேன். புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழக பகுதிகளில் இருந்து தான் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.