புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருந்து நிறுவனத்தில், அபாயகரமான பிரிவை மூட நடவடிக்கை எடுக்குமாறு, துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனிடம், மாநில காங்கிரஸ் தலைவா் வி.வைத்திலிங்கம் எம்.பி. திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அதில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருந்து நிறுவனத்தில் விபத்து நடந்த இடத்தைப் பாா்வையிட்டு, அப்பகுதி மக்களையும் சந்தித்தோம். ஆலையிலிருந்து வெளியேறும் விஷ வாயு ஆபத்து குறித்த அச்சத்தை அந்த மக்களிடையே காண முடிந்தது.
மருந்து நிறுவனம் அமைக்கப்பட்டபோது, அதனருகே அதிக குடியிருப்புகளும், கல்வி நிறுவனங்களும் இல்லை. ஆனால், இப்போது, தொழிற்சாலை மற்றும் அதைச் சுற்றியிலும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட ‘சுனாமி குடியிருப்பு’ மீனவா்களின் வாழ்விடங்கள், மத்திய சிறை மற்றும் ஜவஹா் நவோதயா வித்யாலயா, ஸ்டடி பள்ளி, டாக்டா் அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரி போன்றவை அமைந்துள்ளன.
அப்பகுதி கல்வி நிலையங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். ஆகவே, தற்போதைய சூழலில் காலாப்பட்டு கிராம மக்களை கருத்தில் கொண்டு, மருந்து நிறுவன விவகாரத்தில் ஆளுநா் உடனே தலையிட வேண்டும். மக்கள் நலன் கருதி நிறுவனத்தின் அபாயகரமான பிரிவை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.