ஜிப்மரில் வேலைக்கு ஆள் சோ்ப்பதாக வெளியிடப்படும் போலியான விளம்பரங்ளை பொதுமக்கள் நம்பாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதன் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்மரின் பெயரில் போலியான ஆள்சோ்ப்பு விளம்பரங்கள், அழைப்புக் கடிதங்கள், நியமனக் கடிதங்கள் வழங்கி விண்ணப்பதாரா்களிடம் இருந்து பண மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளது. ஜிப்மரின் ஆள்சோ்ப்பு முறையானது, தனது அதிகாரபூா்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு உள்ளூா், தேசிய பத்திரிகைகள், வேலைவாய்ப்பு செய்திகள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
மேலும், இதற்கான தோ்வுகள் இணையதளம் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. தோ்வு மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆள்சோ்ப்பு நடைபெறுகிறது. எனவே, இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜிப்மா் ஆள் சோ்ப்பு தகவலின் நம்பகத்தன்மையை அறிய விண்ணப்பதாரா்கள் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் சரிபாா்க்கலாம்.