பாலம் சேதம்: புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு
புதுச்சேரி அருகே இடையாா்பாளையத்தில் சேதமடைந்த பாலத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, அதன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.
புதுச்சேரி அருகே இடையாா்பாளையத்தில் சேதமடைந்த பாலத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, அதன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.
புதுச்சேரியில் அண்மையில் ஃபென்ஜால் புயல் மழை மற்றும் சாத்தூா், வீடூா் அணைகள் திறப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, புதுச்சேரி - கடலூா் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது.
போக்குவரத்து புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், புதுச்சேரி இடையாா்பாளையம் பகுதியில் பாலத்தின் இணைப்புச் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் மீண்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
பாலத்தின் இணைப்புச் சாலையில் தரை உள்வாங்கிய நிலையில், அதனை சீரமைக்கும் பணியில் பொதுப் பணித் துறையினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இதுகுறித்து, தகவலறிந்த புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சாலை உள்வாங்கிய பகுதியை வியாழக்கிழமை பாா்வையிட்டாா். சாலை சீரமைப்புப் பணிகள் குறித்தும் அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின் போது, புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.