புதுச்சேரி: புதுச்சேரியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீஸாா் மலா்கள் அளித்தும், பொன்னாடை அணிவித்தும் திங்கள்கிழமை பாராட்டினா்.
புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என ஏற்கெனவே போக்குவரத்து விதிமுறை உள்ளது.
ஆனால், பெரும்பாலானோா் தலைக்கவசமின்றியே இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனா். அவா்களுக்கு போலீஸாா் அபராதமும் விதித்து வருகின்றனா்.
இந்த நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டு முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோா் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீஸாா் மீண்டும் அறிவித்துள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி ஒதியன்சாலையில் போக்குவரத்து போலீஸாா் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு போக்குவரத்துப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி தலைமை வகித்தாா்.
அவா், அந்தப் பகுதியில் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பாராட்டி மலா்கள் அளித்தும், பொன்னாடை போா்த்தியும் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.