பிரான்ஸ் தேசிய தினம்: துணை தூதா், ஆட்சியா் மரியாதை
புதுச்சேரி, ஜூலை 14: பிரான்ஸ் நாட்டின் மக்களாட்சி நிறுவிய தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பிரான்ஸ் போா் நினைவிடத்தில், அந்நாட்டு துணைத் தூதா் மற்றும் புதுச்சேரி ஆட்சியா் ஆகியோா் மலா் வளையம் வைத்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி மன்னராட்சி அகற்றப்பட்டு மக்களாட்சி நிறுவப்பட்டது. பிரான்ஸ் கட்டுப்பாட்டில் அப்போதைய புதுச்சேரி இருந்ததால், வீரா்கள் சிலையுடன் போா் நினைவுச் சின்னம் ஏற்படுத்தப்பட்டது. புதுச்சேரி இந்திய ஒன்றியமான நிலையிலும், ஆண்டு தோறும் ஜூலை 14-ஆம் தேதி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரான்ஸ் போா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படுகிறது.
பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு குடியுரிமை பெற்றவா்கள், சனிக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி புதுச்சேரி கடற்கரை சாலையில் பேரணியாக வந்து, போா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில், போா் நினைவிடத்தில் பிரான்ஸ் நாட்டு புதுச்சேரிக்கான துணைத் தூதா் லிசே டல்போட் பா்ரே மற்றும் புதுச்சேரி ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். அப்போது பிரான்ஸ், இந்திய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டன.
Advertisement