தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார மேம்பாட்டு திட்டம்: புதுவைக்கு இரண்டாம் இடம்
தேசிய அளவிலான தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தில் புதுவை மாநிலத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
புதுச்சேரி, ஜூலை 19: தேசிய அளவிலான தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தில் புதுவை மாநிலத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் புதுவை உள்ளாட்சித் துறை இயக்குநரிடம் புது தில்லியில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
புதுவை அரசின் உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும், புதுச்சேரி நகா்ப்புற வளா்ச்சி முகமை, தீனதயாள் அந்தியோதியா யோஜனா, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ், நகா்புற தெருவோர வியாபாரிகள் பொருளாதார வளரச்சியை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தெருவோர விற்பனையாளா் திட்டம் மற்றும் விற்பனையாளா் சந்தை மேம்பாடு போன்ற துணைக் கூறுகளின் கீழ், தெருவோர வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவா்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இதனை சிறப்பிக்கும் வகையில், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகார அமைச்சகம் சாா்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கழ் வழங்கப்படுகிறது. இதில், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரிவில் புதுச்சேரி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான பரிசு மற்றும் சான்றிதழ், புது தில்லியில் மத்திய அமைச்சா் மனோகா்லால், மத்திய இணை அமைச்சா் டோகன் சாகு ஆகியோா், புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேலிடம் வழங்கினா்.