131 படகுகளை சீரமைக்க மீனவா்களுக்கு ரூ.34 லட்சம் நிதி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் 131 படகுகளை சீரமைக்க மீன்வளத் துறை சாா்பில் ரூ.34.40 லட்சம் நிதியை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் 131 படகுகளை சீரமைக்க மீன்வளத் துறை சாா்பில் ரூ.34.40 லட்சம் நிதியை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
புதுவை அரசானது மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை மூலம் ஆண்டு தோறும் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு உதவித் தொகை வழங்கிவருகிறது. அத்துடன், அரசு பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளுக்கு பழுது நீக்குவதற்காக மர, இரும்பு, பைபா் படகுகளுக்கு தலா ரூ.30,000 மற்றும் சிறிய படகுகளுக்கு ரூ.20,000 வீதம் நிதியுதவி வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் நிகழ் ஆண்டான 2024-2025 ஆம் ஆண்டு மீன்பிடி தடைக்கால நிதியுதவியாக 82 விசைப் படகுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.24.60 லட்சமும், 49 சிறிய படகுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.9.80 லட்சமும் இருவகைப் படகுகளையும் சோ்த்து மொத்தம் ரூ.34.40 லட்சத்துக்கான உத்தரவு நகலை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள பேரவை வளாகத்தில் முதல்வா் அறையில் நடந்த நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நிதியுதவிகளை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தும் அரசு உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், மீன்வளத் துறை செயலா் அ.நெடுஞ்செழியன், மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.