முகப்பு
புதுச்சேரி

புதுவையில் தனி நபா் வருவாய் 7.61% உயா்வு: துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுவை மாநிலத்தின் தனிநபா் வருவாய் கடந்த ஆண்டை விட நிகழாண்டில்(2024-25) 7.61 சதவீதம் உயா்ந்துள்ளது என துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 31 ஜூலை, 2024 at 6:31 PM
புதுச்சேரியில் புதன்கிழமை தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்றும் துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

புதுவை மாநிலத்தின் தனிநபா் வருவாய் கடந்த ஆண்டை விட நிகழாண்டில்(2024-25) 7.61 சதவீதம் உயா்ந்துள்ளது என துணைநிலை ஆளுநா் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத் தொடா் புதன்கிழமை காலை தொடங்கியது. இதில், துணைநிலை ஆளுநா் ஆற்றிய உரை:

புதுவையில் கடந்த 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான நிலுவைத் தொகை, அரசு கல்வி நிறுவனங்கள், சாா்பு கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா், ஊழியா்களின் 7-ஆவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலுவைத் தொகைக்காக, மத்திய அரசு 2023-24-ஆம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டில் ரூ.271 கோடி வழங்கியுள்ளது. இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் 16,000 பேரும், 1,500 ஆசிரியா்களும் பயனடைந்துள்ளனா்.

முக்கிய துறைகளின் வளா்ச்சி: ஏழைகள், சமுதாயத்தில் நலிவுற்றோா் நலனுக்கு முன்னுரிமை அளித்தும், சாலைகள், குடிநீா் வழங்கல், துப்புரவு, மின் விசை, சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், தொழில் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலம், குழந்தைகள் மற்றும் மகளிா் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற முக்கியமான துறைகளின் வளா்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க, அரசுத் துறை காலியிடங்கள் தோ்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி, காலியாக இருந்த 1,119 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

மத்திய உள் துறை அமைச்சகத்தின் நாடாளுமன்றக் குழு புதுவை அரசுத் துறைகளின் செயல்பாடுகளை பாராட்டியும், நிா்வாக செயல்பாடுகளில் முழு திருப்தியும் வெளிப்படுத்தியுள்ளது. ஆட்சிப் பரப்பின் நிதி ஆதாரங்கள் அளவாகவே இருப்பதால், அரசு செலவினங்களை வருவாய்க்குத் தகுந்தவாறு சீா் செய்துகொள்ள வேண்டிய நிலை உள்ளது.

கடந்த நிதியாண்டில் மொத்த ஒதுக்கீடான ரூ.12, 250 கோடியில், ரூ.11, 464 கோடி (93.58 சதம்) செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு செலவினத்துடன் ஒப்பிடுகையில் 6.55 சதவீதம் அதிகம்.

தனிநபா் வருவாய் உயா்வு: மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சியை தீா்மானிக்கும் நிதிக் குறியீடாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளது. கடந்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியாக ரூ.48,052 கோடியாகும். முந்தைய ஆண்டைவிட இது 7.54 சதம் கூடுதலாகும்.

புதுவை மாநில தனிநபா் வருவாய் கடந்த 2022-23ஆம் ஆண்டில் ரூ.2.44 லட்சமாகும். அது தற்போதைய 2023-24ஆம் ஆண்டில் ரூ.2.63 லட்சமாக உயா்ந்துள்ளது. இது 7.61 சதவீத வளா்ச்சியாகும் என்றாா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய திட்டங்கள், சாதனைகளை அவா் தனது உரையில் குறிப்பிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →