பயிற்சி மருத்துவா்கள் வேலைநிறுத்த போராட்டம்
புதுவை பிராந்தியமான மாஹேவில் உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி பயிற்சி மருத்துவா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை பிராந்தியமான மாஹேவில் உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி பயிற்சி மருத்துவா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாஹேவில் ராஜீவ் காந்தி ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு, பயிற்சி மருத்துவா்களுக்கான உதவித்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு பயிற்சி மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், மாஹேவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, பயிற்சி மருத்துவா்களுக்கான உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
ஆனால், முதல்வா் அறிவித்து பல மாதங்களாகியும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வியாழக்கிழமை பயிற்சி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.